![]() |
Kathai SolliAuthor: Kathai Solli
Reading out aloud, Tamil stories for kids. When we read to kids, they develop interest in reading, extend their attention span and stretch their imagination. Let our children explore the treasure. Language: ta Genres: Kids & Family, Stories for Kids Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it |
Listen Now...
ஆயிரம் காசுகள் - 45வது கதை
Episode 45
Wednesday, 23 June, 2021
எல்லாரும் தான் தெய்வத்திடம் வேண்டுவாங்க. முனுமுனுமுனுன்னு நிறைய காசு வேணும், பணம் வேணும், நகை வேணும் இன்னும் என்னென்னல்லாமோ வேண்டுவாங்க. நஸ்ருதீன் ஹோட்ஜாவும் வேண்டுவார். ஆனா அவர் கொஞ்சம் வித்தியாசமா வேண்டுவார். கொஞ்சம் சத்தம் போட்டு வேண்டுவார். “தெய்வமே! எனக்கு ஆயிரம் தங்கக்காசுகள் வேணும். ஆயிரம் காசு. அதுக்கும் குறையா ஒரு காசு நீ கம்மியா குடுத்தாலும் எனக்கு வேண்டாம். ஆயிரம்னா ஆயிரம் தான்.” அப்படின்னு தினமும் வேண்டுவார். இது இவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கும் கேட்கும். ஒருநாள் அந்த பக்கத்து வீட்டுக்காரர் நஸ்ருதீன் ஹோட்ஜாவ சும்மா சீண்டிப்பாத்து விளையாடலாம்னு நினைச்சாரு. ஒரு பையில எண்ணி சரியா தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக் காசுகளை போட்டு வைச்சுக்கிட்டாரு. அதாவது ஆயிரத்துக்கு ஒரு காசு கம்மி. நஸ்ருதீன் ஹோட்ஜா தெய்வத்திடம் காசு வேணும்னு வேண்டும்போது, அவர் வீட்டுக்குள்ள அந்தப் பையை ஜன்னல் வழியா தூக்கிப் போட்டாரு. நஸ்ருதீன் ஹோட்ஜா தன் பக்கத்துல வந்து விழுந்த அந்தப் பையைப் பார்த்ததும் “ஆஹா! தெய்வம் நம்ம வேண்டுதலை நிறைவேத்திருச்சு.”ன்னு சந்தோஷமா அந்தப் பைக்குள்ளப் பார்த்தாரு. அட! பூராந் தங்கக் காசு. அப்படியே அங்கயே கொட்டி ஒன்னுவிடாம எண்ணிப் பாத்தாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது. திரும்பவும் எண்ணிப் பாத்தாரு. திரும்பத் திரும்ப எண்ணிப் பாத்தாரு. இருந்ததென்னவோ தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தான். “என்னடா, நம்ம தெய்வத்திடம் ஆயிரம் காசு கேட்டோம். ஆனா இதுல ஒன்னு குறையா இருக்கே. சரி பரவால்ல. இவ்ளோ குடுத்த தெய்வம் இன்னொன்னு குடுக்காமையா போகும்.”ன்னு நினைச்சுட்டே, குடுத்த தெய்வத்துக்கு நன்றிய சொல்லிட்டு, பைய மடில முடிஞ்சாரு. இதையெல்லாம் வெளிலருந்து பாத்துட்டேயிருந்த அந்த பக்கத்து வீட்டுக்காரர், “ஏய், ஏய், ஏமாத்துக்காரா.. ஒரு காசு கம்மியா குடுத்தாலும் வேணாம்னு வேண்டிட்டு இப்ப எடுத்து மடில வைச்சுக்கிட்டியே. குடுய்யா என் காச”ன்னு நஸ்ருதீன் ஹோட்ஜாட்ட சண்டைக்குப் போனாரு. “காசு தரணுமா? எதுக்கு?” ஹோட்ஜா கேக்க, “அது எல்லாம் என் காசுதான். உன்னை சோதிச்சுப் பார்க்க நான் தான் போட்டேன்”ன்னு சொன்னார். ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திப்போச்சு. பிரச்சனைய தீர்க்க நீதிமான் கிட்ட போலாம்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். அதுக்கு ஹோட்ஜா, “அது முடியாது. எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. அவ்ளோ தூரம் என்னால நடந்து வர முடியாது”ன்னு சொன்னாரு. “அப்படியா, அப்போ என் கழுதை மேல் உக்காந்து வா”ன்னு சொன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். “இல்லல்ல, நீதிமான் முன்னாடி போய் நிக்க என்கிட்ட நல்ல துணிமணி கூட இல்ல”ன்னாரு ஹோட்ஜா. “அப்படியா, இதோ நான் தர்றேன் நல்ல உடுப்பு உனக்கு. போலாம் வா”ன்னாரு பக்கத்து வீட்டுக்காரர். பக்கத்து வீட்டுக்காரரோட புது உடுப்பையும் போட்டுட்டு, அவரோட கழுதை மேலேயே உக்காந்துட்டு, நீதிமான்ட்ட போனாரு ஹோட்ஜா. பக்கத்து வீட்டுக்காரர் நீதிமான்ட்ட ஹோட்ஜாவின் வேண்டுதல் பத்தியும், தான் காசு போட்டது பத்தியும் சொன்னாரு. நீதிமான் எல்லாத்தையும் கேட்டுட்டு ஹோட்ஜாவைப் பாத்து, இதுக்கு நீ என்னப்பா சொல்றேன்னு கேட்டாரு. ஹோட்ஜா அதுக்கு, “நான் என்னத்தங்க சொல்றது. இவரு எப்பவுமே இப்படித்தான். மத்தவங்க பொருட்களை தன்னோடதுன்னு சொல்லி வம்புக்கு வருவாரு. இப்போ நீங்களே பாருங்களேன். இந்த கழுதை யாருதுன்னு கேட்டா தன்னோடதுன்னு சொல்வாரு பாருங்களேன்”ன்னாரு. நீதிமான் அதே மாதிரி பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து இந்தக் கழுதை யாருடையதுன்னு கேட்க, அவரும் அது தன்னோடதுன்னு சொன்னார். திரும்பவும் ஹோட்ஜா நீதிமான்கிட்ட, “ஐயா பாத்தீங்களா பாத்தீங்களா இப்போ நான் போட்டிருக்க சட்டையும் கூட அவருதுன்னு சொல்லுவாரு பாருங்களேன்”ன்னாரு. பக்கத்து வீட்டுக்காரரும் உடனே, “ஆமாம் அந்த சட்டையும் என்னுடையது தான்”னு சொன்னாரு. உண்மையிலேயே அந்த கழுதையும் சட்டையும் அவரோடது தானே. இதையெல்லாம் பார்த்த நீதிமான் தீர்ப்பு சொன்னாரு, “மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களை நீ உன்னுடையது என்று முறையிடுவது தவறு” என்று எச்சரித்து அனுப்பினாரு. தொள்ளாயிரத்துத் தொன்னூத்து ஒன்பது தங்கக்காசுகளும் போய், இப்போ கழுதையும், ஒரு நல்ல உடுப்பும் போய், அந்த பக்கத்து வீட்டுக்காரர் பரிதாபமாய் நின்றார். தன்னை மன்னித்து தன்னுடையதைத் தந்துவிடுமாறு ஹோட்ஜாவிடம் வேண்டினார். ஹோட்ஜா புன்னகையுடன் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவருடையை பணத்தையும் கழுதையையும் உடுப்பையும் திருப்பித் தந்தார். அந்த பக்கத்து வீட்டுக்காரர் அதன்பின் ஹோட்ஜாவிடம் எந்த வம்பும் செய்வதேயில்லை.













