allfeeds.ai

 

editor2's podcast  

editor2's podcast

Give it a listen!

Author: editor2 editor2

Language: en-us

Genres: News

Contact email: Get it

Feed URL: Get it

iTunes ID: Get it


Get all podcast data

Listen Now...

Nagi-Narayanan -Thodi Raagam
Friday, 9 January, 2009

Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது இரண்டாவது ராகம். கடபயாதி ஸங்க்யை முறைப்படி இதை "ஹனுமதோடி" என்று அழைப்பார்கள். இதன் ஆரோஹண அவரோஹணத்தை இப்போது கூறுகிறேன். ஸ, ரி1, க2, ம1, ப, த1, நி2, ஸ் ஸ், நி2, த1, ப, ம1, க2, ரி1, ஸ அதாவது, இதன் ஸ்வரங்கள், ஸ (ஷட்ஜம்), சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், ப(பஞ்சமம்), சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் மற்றும் மேல் ஷட்ஜம். இது கர்நாடக இசையில் ஒரு முக்கியமான ராகமாகும். இதற்குப் பல ஜன்ய ராகங்களை உற்பத்தி செய்த பெருமை உண்டு. இந்த ராகத்தைப் பாடும்போது ஜண்டை ஸ்வரங்களாக 'கக மம தத, மம தத நிநி, தத நிநி ஸ்ஸ்' என்ற ப்ரயோகங்களை உபயோகப்படுத்தி, பாடலுக்கு அழகு சேர்ப்பார்கள். இன்னும் முக்கியமாக தாடுஸ்வர ப்ரயோகங்களாக, 'நிகரிநித நிரிநிதம கமநிதம காரிஸா' போன்ற ப்ரயோகங்கள் கச்சேரியை களை கட்டச் செய்து விடும். பஞ்சமத்தை உபயோகிக்காமல், 'தநிஸதா, ரிஸதா' என்று சிலர் சில இடங்களில் பாடுவார்கள் - இவை 'பஞ்சம வர்ஜப்ரயோகங்கள்' என்று அழைக்கப்படுபவை - கேட்பதற்கே ரம்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, பட்டணம் சுப்ரமண்ய அய்யருடைய "ஏராநாபை" என்று ஆரம்பிக்கும் தோடி வர்ணத்தில், சரணத்தில், 'தநிதகரிரி மகரிஸ நிகரிஸநித நிகரி நிரிநிதநி தகரிநிதமதநி (ஏராநாபை..) என்று வரும். இந்த ஸ்வரங்களில் பார்த்தீர்களானால், பஞ்சமமே வராது. அதில் ஒரு தனி அழகு இருக்கிறது. ஹிந்துஸ்தானி இசையில் இதற்கு இணையானது பைரவி தாட். அவர்கள் இதை ஒரு காலையில் பாடும் ராகமாகக் கருதுகிறார்கள். ஹிந்துஸ்தானி இசையின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வெவ்வேறு. அவர்களது தோடி நமது சுபபந்துவராளியைப்போல் இருக்கும். இந்தத் தோடி ராகத்தின் சரித்திரம் என்று பார்த்தால், பழங்காலத்திலிருந்து இந்த ராகத்தைப்பற்றி முக்கியமான பல புத்தகங்களில் எழுதப்பட்டு உள்ளது. 11ம் நூற்றாண்டின் பாரஸ்வதேவா அவர்கள் எழுதிய "ஸங்கீத சமய ஸாரா", 13ம் நூற்றாண்டின் "ஸங்கீத ரத்னாகரம்", 14ம் நூற்றாண்டின் லோசன கவி அவர்கள் எழுதிய "ராக தரங்கிணி", 1609 இல் ஸோமநாதரால் எழுதப்பட்ட "ராகவிபோதா", 1735 இல் துளஜா மஹாராஜாவால் எழுதப்பட்ட "ஸங்கீத ஸாராம்ருதா", 18-19ம் நூற்றாண்டில் கோவிந்தாச்சார்யா அவர்களால் எழுதப்பட்ட "ஸங்க்ரஹ சூடாமணி" போன்ற புத்தகங்களில் தோடி ராகத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், ஸரபோஜி மஹாராஜாவின் சபையில் தோடி ஸீதாராமைய்யா என்ற ஒரு புகழ் பெற்ற பாடகர் இருந்தார். அவர் இந்த ராகத்தை எட்டு நாட்களுக்கு நிறுத்தாமல் பாடினாராம். இது ஒரு முறியடிக்கப்படாத சாதனையாகும். இதனாலேயே அவருக்கு "தோடி ஸீதாராமைய்யா" என்ற பெயர் வந்தது. ராக ஆலாபனை செய்வதில் படிப்படியாக முன்னேறிச் செல்வதற்கு சில முறைகள் உண்டு. அதன்படி அவர், அக்ஷிப்தா, ராகவர்தனி, ஸ்தாயி, மற்றும் மகரிணி என்ற வழிமுறைகளில் பாடி அதன் பிறகு முறையாக ஒரு அமர்க்களமான பல்லவி பாடி நிறைவு செய்தாராம். கேட்பதற்கே மலைக்கிறது. இவர் சில சமயங்களில் தனக்கு பணத்தேவை ஏற்படும் நேரங்களில் கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தான் பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுக்கும் வரை இந்த ராகத்தைப் பாடுவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு,தன்னுடைய சொத்தான இந்தத் தோடி ராகத்தை அடகு வைப்பாராம் !!! திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்றே பெயர் பெற்றவர். அவர் தோடி ராகம் வாசிப்பதில் மன்னன். தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருவாவடுதுறை, மற்றும் திருப்பனந்தாள் போன்ற கோவில்களின் விழாக்களில் அவர் வாசித்த தோடி அதி அற்புதமானது. செவிகளுக்கு ஒரு பெரிய விருந்து. இந்தத் தோடி ராகத்தை அவர் மணிக்கணக்கில் விரிவாக வாசிப்பார். சில நேரங்களில் இரவு முழுவதும் கணக்கில்லாத கற்பனைகளுடன் வாசித்துக் கொண்டே இருப்பார். ரசிகர்களும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தோடி ராகம் இவருடைய வீட்டுச் சொத்து என்றே மக்கள் கருதினார்கள். ஒருமுறை திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி அவர்கள் திரு.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் அமர்ந்திருந்த ஒரு சபையில் தோடி ராகம் பாடினாராம். கச்சேரி முடிந்ததும் ராஜரத்தினம் பிள்ளை அவர்கள், எம்.எல்.வி அவர்களை அற்புதமாகப் பாடியதற்குப் பாராட்டினாராம். நாதச் சக்கரவர்த்தி அவர்களின் வாயால் கிடைத்த இந்தப் பாராட்டு மிகப் பெரியது. மதுரை மணி அய்யர் அவர்கள் "கொலுவமரகதா", "தாயே யசோதா" போன்ற பாடல்களை தன் கச்சேரிகளில் பாடிப் பிரபலப் படுத்தினார். திரு.ராமஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் ஒரு ஸ்வராக்ஷர வர்ணம் இயற்றியுள்ளார். ஸ்வராக்ஷரம் என்றால், ஸ்வரங்களே வார்த்தைகளாக இருக்கும். உதாரணத்திற்கு, அதன் பல்லவி இப்படி இருக்கும் - ஸரிகாநி, தாநி, பாமரினி, நீ பத ஸமாகமமாக நீகநிநிஸா இது கேட்பதற்கு ஏதோ ஸ்வரங்களைப் படிப்பது போல் இருக்கும். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கும். இதே போல திரு. பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள் தெலுங்குப் பாடல்ஒன்று இயற்றியுள்ளார். அதன் பல்லவி இப்படி இருக்கும் - மா மானினி நீ தாம கனி நீ தாஸரினி காதா இப்படி இந்த ராகத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ராகம் பக்தி மற்றும் கருணை ரஸத்தை எழுப்பும். அதனால்தான் இந்த ராகத்திலும் இதன் ஜன்ய ராகங்களிலும் பல பக்திப்பாடல்கள் உள்ளன. இந்த ராகத்தில் கீர்த்தனைகள், ஸ்லோகங்கள், விருத்தங்கள், பத்யங்கள் என்று எல்லா வகையான பாடல்களையும் பாடுவார்கள். பெயர் பெற்ற பெரிய மற்றும் சிறிய பாடலாசிரியர்கள் இந்த ராகத்தில் பல பாடல்கள் புனைந்துள்ளார்கள். மிக நீண்ட ஆலாபனை செய்வதற்கு இடம் கொடுக்கும் ஒரு ராகம் இது. நாட்டிய நாடகங்களிலும் இந்த ராகத்தை உபயோகப்படுத்துவார்கள். இந்த ராகத்தை எல்லா நேரங்களிலும் பாட முடியும். தமிழிசையின் "மத்தகோகிலம்" என்ற ராகம் இதை ஒத்தது. இந்த ராகத்தில் அமைந்த சில கர்நாடக இசைப்பாடல்களை இப்போது பார்க்கலாம். முதலில் வர்ணம் - "ஏராநாபை.. இந்த சௌக.. சேய மேர காதுரா...நா ஸாமி..." இது பட்டணம் சுப்பிரமண்ய அய்யர் அவர்கள் இயற்றியது. தியாகராஜர் இந்த ராகத்தில் பல கீர்த்தனைகள் செய்துள்ளார். அவற்றில் சில, முதலில், "கொலுவமரகத கோதண்டபாணி..", இன்னொன்று, "சேசினதெல்ல மரசிதிவோ" "கத்தனுவாரிகி.கத்து.", இன்னொன்று, "தாசரதே"..., இன்னொன்று, "ஏமி ஜேசிதேனே..மி" இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். திரு.பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய, "கார்த்திகேய காங்கேய கௌரி தனயா" என்ற பாடல் மிகப் பிரஸித்தம். கமலாம்பா நவாவர்ண கீர்த்தனைகளில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர்கள் இந்த ராகத்திலும் இயற்றி இருக்கிறார். "கமலாம்பிகே ஆச்ருத கல்பலதிகே..." என்று வரும் இந்தப்பாடல். ச்யாமா சாஸ்த்ரி அவர்கள், "நின்னே நம்மி நானு" என்ற கீர்த்தனையை இயற்றி உள்ளார். அவர் இயற்றியுள்ள, "ராவே ஹிமகிரிகுமாரி கஞ்சி காமாக்ஷி" என்ற ஸ்வரஜதி மிக அழகாக இருக்கும். ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர் அவர்கள் இயற்றிய ஒரு பதம் மிக மிகப் பிரபலம் - "தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்" என்ற இந்தப் பாடலை நீங்கள் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள். கேரளத்து மஹாராஜா ஸ்வாதி திருநாள் அவர்கள் இந்த ராகத்தில் சில கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். "பாரதி மாமவ க்ருபயா..." என்று ஒரு கீர்த்தனை உண்டு. இது நவராத்திரியின் ஐந்தாவது ராத்திரிக்கான கீர்த்தனை. இன்னும் இந்த ராகத்தில் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்காக சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். திரை இசைப் பாடல்கள் அவ்வளவாக இந்த ராகத்தில் இல்லை. ஒரு சிலவற்றை உதாரணத்திற்குச் சொல்கிறேன். முதலில், 'திருவிளையாடல்' படத்தில் "ஒரு நாள் போதுமா" என்ற பாடலில் "இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ எழுந்தோடி...தோடி....." என்று மிக அழகாக தோடி ராகத்தைக் கோடி காட்டுவார் திரு. பாலமுரளிக்ருஷ்ணா அவர்கள். இன்னொன்று, 'வருஷம் 16' என்ற படத்தில் வரும், "கங்கைக்கரை மன்னனடீ. கண்ணன் மலர்க் கண்ணனடீ வங்கக் கடல் வண்ணனடீ உள்ளம் கவர் கள்வனடீ .". மிக அழகாக மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்துள்ள இந்தப்பாடலை திரு.ஜேசுதாஸ் அவர்கள் அற்புதமாகப் பாடி உள்ளார். இசைஞானி இளையராஜா அவர்கள் தோடி ராகத்தை மிக லாகவமாகக் கையாண்டுள்ளார். இந்தப்பாடலை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வலைத்தளத்தில் நீங்கள் கேட்கலாம் - http://www.oosai.com/oosai_plyr/playerWin.cfm?list=4103 'வணங்காமுடி' படத்தில் வரும், "நீயே கதி ஈஷ்வரீ" என்ற பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளதை எல்லா வலைத்தளங்களும் உறுதியாகக் கூறுகின்றன. ஆனால் அந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. ஆகவே அதைப் பாடிக் காட்டமுடியாததற்கு மன்னிக்கவும். அதே போல, "தோடி ராகம்" என்று ஒரு திரைப்படமே வந்துள்ளது. அதில் கர்நாடக இசைப் பாடகர் திரு.சேஷகோபாலன் அவர்கள் நடித்துள்ளார். எவ்வளவோ முயன்றும் துரதிருஷ்ட வசமாக எனக்கு அதன் பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை. உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் கேட்டுப் பார்க்கவும். சரி நேயர்களே, அடுத்து வேறொரு ராகத்தோடு உங்களைச் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடைபெறுவது, பெங்களூரிலிருந்து நாகி நாராயணன்.

 

We also recommend:


Die Nachrichten
Deutschlandfunk

P4 Göteborg
Sveriges Radio

Talkline Communications
Zev Brenner

SBS Kurdish - SBS Kurdî
SBS

The World Beyond the Headlines from the University of Chicago
The Center for International Studies at the University of Chicago

This Week In Lies
This Week In Lies

UOL News: Esporte


JAPAN FM NETWORK



Acme Packing Company: for Green Bay Packers fans
SB Nation

Who Killed Elsie Frost?
BBC Radio 4

Mediametrics
kashuba