CupidbuddhaAuthor: CupidBuddha
Cupidbuddha's Podcast Language: ta Genres: Arts, Performing Arts Contact email: Get it Feed URL: Get it iTunes ID: Get it Trailer: |
Listen Now...
தடுமாறுகிறதா பள்ளிக்கல்வித்துறை?
Friday, 10 January, 2025
மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கை, பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை உணர்த்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்பதே இல்லை என்பது நிறைவு தரும் செய்தி. கொரோனாவுக்குப் பிறகான புத்தியல்புச் சூழலில் குழந்தைகளை மீட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்து இடைநிலைக் கல்விவரை உறுதி செய்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்க சாதனை.ஆனால், 9, 10-ம் வகுப்புகளில் 10.8% மாணவர்கள், 4.4% மாணவிகள் இடைநிற்கிறார்கள் என்ற செய்தி கவலைக்குரியது. பதின்பருவத்தில் பள்ளியை விட்டு விலகுகிற பிள்ளைகள் தடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மாணவிகளின் இடைநிற்றல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.ஒரு கி.மீ தூரத்துக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ-க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ-க்கு ஓர் உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீ-க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என இந்தியாவிலேயே மிக வலுவான கல்விக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பிள்ளைகளைப் பள்ளிக்கு ஈர்க்க பல்வேறு திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் 100-ல் 8 மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை விட்டு விலகுகிறார்கள் என்பது எச்சரிக்கைச் செய்தி. இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு என்று நாம் மகிழ்ச்சியடைய முடியாது.தமிழ்நாட்டில் 2,758 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுவதாகச் சொல்கிறது இந்த அறிக்கை. ஓராசிரியர் பள்ளி என்ற கட்டமைப்பே தவறானது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும் என்பது கல்விச்சூழலை மிகவும் பாதிக்கும். 80,586 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓராசிரியர் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆசிரியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டும்.இந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்கூட சேராத பள்ளிகள் தமிழ்நாட்டில் 496 இருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பள்ளிக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கூட ஏன் இந்தப் பள்ளிகளை நம்பாமல் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை வெளிப்படையான தணிக்கை செய்ய வேண்டும்.பள்ளிக்கல்வித் துறைக்கு 2024-25 நிதிநிலை அறிக்கையில் ரூ. 44,042 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு. என்றாலும், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்', ‘நம்ம ஊரு, நம்ம பள்ளித் திட்டம்' என வெளியில் கையேந்தும் நிலையே இன்னும் இருக்கிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், சொற்ப தொகுப்பூதியத்திலும் மதிப்பூதியத்திலும் நியமித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. தங்களது எதிர்காலமே தெரியாத தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்துக்கு எப்படிப் பொறுப்பேற்க முடியும்?சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்து இப்போதுதான் முதல் தலைமுறையாக நிறைய மாணவர்கள் கல்லூரிகளை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். அதிலும் 100-ல் 50 பேரின் கல்வி பள்ளியோடு முடிந்துவிடுகிறது என்பது நமக்குப் பெருமை இல்லை. எல்லோருக்கும் சமவாய்ப்பளித்து, சமத்துவமான கல்வியை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த இலக்கைச் சிரமேற்கொண்டு இன்னும் அடுத்தடுத்த படிக்கட்டுகளில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஏற வேண்டும்.